பாஜக உடன் ரகசிய உடன்பாட்டில் உள்ள ஸ்டாலின் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
தமிழக முதல்வர் ஸ்டாலின்பாஜக உடன் ரகசிய உடன்பாட்டில் உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜக உடன் ரகசிய உடன்பாட்டில் ஸ்டாலின்
தமிழ்நாட்டை போலவே மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜக உடன் ரகசிய உடன்பாட்டில் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

நகாஷிபாராவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இது குறித்து பேசிய அவர், "தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களில் ஒரு சில அதிகாரிகளை மட்டுமே இடமாற்றம் செய்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சுமார் 500 அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.
மேற்கு வங்க கேடரைச் சேர்ந்த பல அதிகாரிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டிற்குப் பார்வையாளர்களாக அனுப்பப்பட்டுள்ளனர்.
உங்களுக்கும்(பாஜக) காங்கிரஸுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே ஏதோ ஒரு மறைமுகமான உடன்பாடு இருக்க வேண்டும்.
அவர்கள் (பாஜக) தங்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்வதற்காக, மேற்கு வங்கத்தில் முக்கிய பதவிகளில் தங்களது அதிகாரிகளை நியமித்து வருகின்றனர்" என கூறியுள்ளார்.
முன்னதாக, சம்சர்கஞ்சில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றியபோது, “திமுகவிற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே உள்ள ரகசிய உடன்பாடு என்ன? வங்காளத்தைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும் அவர்களது சொந்த மாநிலத்தில் வைத்திருக்காமல், தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறார்கள்” என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் சீமான் மற்றும் விஜய் உள்ளிட்ட தலைவர்களே திமுக மற்றும் பாஜக ரகசிய உடன்பாட்டில் இருப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், பாஜகவிற்கு எதிரான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வரும் நிலையில் மம்தா பானர்ஜியின் இந்த குற்றச்சாட்டு இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணிக்கம் தாகூர் கண்டனம்
மம்தா பானர்ஜியின் இந்த கருத்து பொறுப்பற்றது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "Mamata Banerjee அவர்களின் சமீபத்திய கருத்து மிகவும் பொறுப்பற்றதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். பாஜக எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய இந்த நேரத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மட்டுமே பலவீனப்படுத்தும்.
எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைப்பது மம்தா பானர்ஜி அவர்கள் சமநிலையை இழந்து பேசுவதைப் போல தோன்றுகிறது. 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் அல்ல, திரிணாமூல் காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததும், 2004 தேர்தலில் RSS-பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதும் மறக்கக் கூடாது.
Mamata Banerjee அவர்களின் சமீபத்திய கருத்து மிகவும் பொறுப்பற்றதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) April 7, 2026
பாஜக எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய இந்த நேரத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மட்டுமே பலவீனப்படுத்தும்.
எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு குற்றச்சாட்டு… pic.twitter.com/vq58T4fMiQ
உண்மைகள் இல்லாமல் கூட்டணி கூட்டாளிகளை குறிவைத்து, அமைப்புகளின் மீது சந்தேகம் எழுப்புவது தலைமைத் தன்மையல்ல, அது கவனச் சிதறலாகும்.
எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து RSS-பாஜக கொள்கைக்கு எதிராக நின்று போராடி வருகிறார். அவர்மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது அரசு வீடும் காலி செய்யப்பட்டது. RSS/ BJP எதிர்த்து நிற்பதற்கு அவர் செலுத்திய விலை இது.
பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு யாரிடமும் பாடம் தேவையில்லை. இது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுக்கான நேரமல்ல. இது ஒற்றுமை, பொறுப்பு, மற்றும் நோக்கத்தில் தெளிவு கொண்டிருக்க வேண்டிய நேரம்" என தெரிவித்துள்ளார்.