24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை - மம்தாவுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!

Politics mkstalin mamta westbengal
By Nandhini Apr 13, 2021 06:30 AM GMT
Report

அனைத்துக் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பைத் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நான்கு கட்டத் தேர்தல் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், இன்னும் 4 கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றிட, மதரீதியாக மம்தா பேசி வருவதாகவும், மத்திய படைகளுக்கு எதிராக வாக்காளர்களை தூண்டி வருவதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மம்தா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் அவருக்கு 24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்திருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஜனநாயக விரோதமானது என்றும், அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டது என்றும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

தற்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மம்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், அனைத்துக் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினைத் தேர்தல் ஆணையம் உறுதிசெய்வதோடு, ஒருசார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பது நியாயமான நேர்மையான தேர்தல்களில் தான் நிலை கொண்டுள்ளது. எனவே ஒரு சார்பின்மை, நடுநிலை கடைபிடிக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்திட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.