தர்ணா போராட்டத்தில் தனது ஓவியத் திறமையை வெளிக்காட்டிய மம்தா!

Politics Struggle
By Nandhini Apr 13, 2021 11:04 AM GMT
Report

மேற்கு வங்கத்தில் சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.கடந்த மார்ச் 27ந் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்ட தேர்தல் வருகிற 17ந் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், இத்தேர்தலில் போட்டியிட்டுள்ள பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, சர்ச்சைக்குரிய வகையில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் நேற்று அதிரடியாக தடை விதித்தது. இந்த தடை நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் 24 மணிநேர பிரசார தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா நகரில் காந்தி மூர்த்தி பகுதியில், இன்று மதியம் 12 மணியிலிருந்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி ஓய்வு எடுத்து கொள்ளாமல், நாற்காலியில் அமர்ந்தபடி வரிசையாக படங்களை வரைந்து அவரின் ஓவியத் திறமையை வெளிக்காட்டினார். அவர் வரைந்த படங்களை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.