பிறந்தநாள் விழாவில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை? - மமதா சர்ச்சை பேச்சு
மேற்கு வங்கத்தில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் நந்தியா மாவட்டம் ஹன்ஷகில் கிராமத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான பஞ்சாயத்து தலைவர் சமரிந்திர கயாலியின் மகன் பராஜ்கோபால் கடந்த 5 ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளான். அந்த பிறந்தநாள் விழாவில் அதேகிராமத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பங்கேற்றுள்ளார்.
விழாவில் சிறுமி பராஜ்கோபால் மற்றும் அவனது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகாரில் பிறந்தநாள் விழாவுக்கு பின் இரவு எங்கள் மகளை சிலர் வீட்டில் காரில் வந்து விட்டு சென்றனர். மிகுந்த உடல்வலியால் அவதிப்பட்டு வந்த எங்கள் மகள் அதிக ரத்தப்போக்கு காரணமாக மறுநாள் அதிகாலை வீட்டிலேயே உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
மேலும் இதுபற்றி வெளியே கூறினால் வீட்டை எரித்துவிடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான சமரிந்திர கயால் மகன் பராஜ்கோபால் எங்களை மிரட்டினர். இதனால் பயந்த நாங்கள் எங்கள் மகளை கடந்த 10 ஆம் தேதி அடக்கம் செய்துவிட்டோம் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி சர்ச்சைக்க்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமையா? அல்லது கர்ப்பமா? அல்லது காதல் விவகாரமா? எப்படி அழைப்பீர்கள் என போலீசாரிடம் நான் கேட்டேன். இது மோசமான சம்பவம். இதில் கைது நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த சிறுமிக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே காதல் இருந்துள்ளது என எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஒரு பையனும் பெண்ணும் காதலில் இருந்தால் நான் எப்படி அதை தடுக்க முடியும். அந்த சிறுமி 5 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். போலீசாருக்கு 10 ஆம் தேதி தகவல் தெரிந்துள்ளது. ஒருவர் 5 ஆம் தேதி உயிரிழந்தபோது உயிரிழப்பில் சந்தேகம் உள்ள போது ஏன் 5 ஆம் தேதியே போலீசில் புகார் அளிக்கவில்லை. நீங்கள் உடலை எரித்துவிட்டீர்கள். இதில் நிபுணத்துவம் இல்லாத மனிதராக முழுமையான விவரம் தெரியாத நபராக கேட்கிறேன். போலீசார் எப்படி ஆதாரங்களை பெறுவது? என கேள்விகளை மமதா எழுப்பியுள்ளார்.
இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அதேசமயம் இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் மகன் பராஜ்கோபால் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.