உங்கள் மாநில பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை : கோபத்துடன் மோடிக்கு கேள்வி கேட்ட மம்தா
மேற்குவங்க மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பேசும் மோடி உ.பி.யில் பெண்கள் நிலைகுறித்து பேசுவாரா? என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில் முதல்வர் மமதா பானர்ஜியை மிக கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசும் மமதா பானர்ஜியும் நாசமாக்கிவிட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். இந்த நிலையில் சிலிகுரி பகுதியில் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மம்தா பானர்ஜி பாதயாத்திரை நடத்தினார்.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய மமதா பானர்ஜி, நமது மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார் பிரதமர் மோடி. பாரதிய ஜனதா கட்சி ஆளுகிற உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில்தான் உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பாஜக பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. பாஜக தரும் பணத்தை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள். ஆனால் வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு போடுங்கள். இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார்.