காலில் பெரிய கட்டுடன் மருத்துவனையில் மம்தா! நாடகம் என விமர்சிக்கும் பாஜக
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நேற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் மம்தா மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவரை வழிமறித்த சில மர்ம நபர்கள் காரை நோக்கி அவரை தள்ளியுள்ளனர். இதனால் அவருடைய இடதுகாலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்பட்டுள்ளார். இதுபற்றி பேசிய மம்தா பேனர்ஜி, “நான்கு, ஐந்து நபர்கள் திட்டமிட்டே என் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன் பின்னர் மிகப்பெரிய சதி உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் யாருமே இல்லை” என்று தெரிவித்துள்ளார். அவருக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் மம்தா மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இது மம்தா நடத்தும் நாடகம் என விமர்சித்துள்ளனர்.