”நான் புலியைப் போன்றவள்” பாஜகவை எச்சரிக்கும் மம்தா பேனர்ஜி
தமிழகத்தோடு சேர்த்து மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய அளவில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருக்கும் திரினாமுல் காங்கிரசுக்கு சவாலாக பாஜக வளர்ந்துள்ளது. பாஜகவின் சவாலை ஏற்று நேரடியாக நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் மம்தா பேனர்ஜி.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மம்தா பேனர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தபோது மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாரே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மேற்கு வங்கத்தில் அம்லாசுலி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, ''நான் புலியைப் போன்றவள். ஒருபோதும் அதிகாரத்திற்கு தலைவணங்க மாட்டேன். பொதுமக்களுக்காக மட்டுமே என் தலை வணங்கும். ஆனால், பாஜக போன்ற கட்சியினர் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை துன்புறுத்துகின்றனர்.
இதனை நான் ஊக்குவிக்கக்கூடாது. தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள், இடதுசாரிகள் பாஜவிடம் அடமானம் போனவர்கள்.
பாஜகவினர் கலவரத்தைத் தூண்டுபவர்கள். மம்தா பானர்ஜி என்றால் மக்களின் ஆற்றல் என்பது அவர்களுக்குத் தெரியும். மக்களுடன் நின்று தனித்து போராடுபவள் என்பதை அவர்கள் அறிவார்கள்'' என்று கூறினார்.