மம்தா பானர்ஜி மீது தாக்குதல்- திட்டமிட்ட சதியா? பரபரப்பான தேர்தல் களம்

election bjp banerjee mamata
By Jon Mar 11, 2021 04:03 AM GMT
Report

நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜகவின் சவாலை ஏற்று மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார், இன்று (மார்ச் 10) 2 கி.மீ. தூரம் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களுடன் ''மேற்கு வங்கத்துக்கு மண்ணின் மகள்தான் தேவை'' என்ற தலைப்பில் சாலைப் பேரணியில் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து ஹால்தியா துணைப் பிராந்திய அலுவலகத்தில் இன்று மம்தா பானர்ஜி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து தொகுதி மக்களுடன் உரையாடி பிரசாரத்தை மேற்கொண்டு வந்த மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் காரில் ஏற முயன்ற போது, நான்கிலிருந்து ஐந்து அவரை தள்ளிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், வலியில் துடிதுடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளன. முதல்வர் பதவியில் இருக்கும் பெண் மீதான இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் வலுத்துள்ளது. இந்நிலையில் இது திட்டமிட்ட சதி தான் என்றும், தன்னை நான்கு பேர் பிடித்து தள்ளிவிட்டதாகவும், அப்போது போலீசார் யாரும் உடனில்லை எனவும் மம்தா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.