மே 5-ம் தேதி மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் மமதா பானர்ஜி
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் 213 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.
மமதா பானர்ஜி வருகிற மே 5-ம் தேதி முதல்வராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நந்திகிராம் பாஜகவின் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மமதா பானர்ஜி போட்டியிட்டார்.
மிகக் கடுமையான போட்டியில் 2,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் மமதா பானர்ஜி தோல்வியடைந்தார். ஆனால் அரிதிப் பெரும்பான்மையோடு திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக் குழு தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், இது தொடர்பாக இன்று (மே 3) இரவு 7 மணிக்கு ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க மம்தா உரிமை கோரவுள்ளார்.
சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தாலும், முதல்வராக பதவியேற்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று மம்தா ஆட்சியமைக்கிறார். முதல்வர் பதவியேற்ற பிறகு ஆறு மாதத்திற்குள் மமதா பானர்ஜி சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும்.
மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்கள் இறந்துள்ளதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளன. மமதா பானர்ஜி அந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம் அல்லது வேறு ஏதாவது சாதகமான தொகுதியில் வேட்பாளர் ராஜினாமா செய்து இடைத்தேர்தலைச் சந்தித்து அதில் வெற்றி பெறலாம்.