மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார் மமதா பானர்ஜி - மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறார்
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மமதா பானர்ஜி எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் 2000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
ஆனாலும் மமதா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வராக இன்று பொறுப்பேற்றார். பதவியேற்ற ஆறு மாதத்திற்குள் மமதா பானர்ஜி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
294 தொகுதிகள் அடங்கிய மேற்கு வங்காள சட்டமன்றத்திற்கு 292 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. வேட்பாளர்கள் மறைந்ததால் இரண்டு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அந்த தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடைபெறும். மமதா பானர்ஜி அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் அல்லது வேறு சாதகமான தொகுதி எம்.எல்.ஏ ராஜினாமா செய்து அங்கு இடைத்தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறலாம்.