''ஒன்றிய வார்த்தையைக் கூறியே ஒப்பேற்றாமல் ''மம்தா பானர்ஜி மாதிரி நடந்துகொள்ளுங்கள் : திமுகவிற்கு அட்வைஸ் செய்யும் சீமான்!

union seeman dmk advise mamatabaneerjee
By Irumporai Jul 25, 2021 01:18 PM GMT
Report

ஒன்றியம்எனும் வார்த்தையைக்கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல் மம்தா பானர்ஜியைப் போல உளமார ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

தமிழகத்தில் தனித்துவ வலிமையில்லாத நிலையில் அதிமுகவின் தோளேறி பின்வாசல் வழியாக ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கத் துடிக்கும் பாஜகவை முதன்மை எதிரியாகக் கட்டமைத்து.

அதனையொட்டிய பரப்புரைகளை முன்வைத்து அதன் விளைவாக ஆட்சியதிகாரத்திற்கு வந்த திமுக. இன்றைக்கு பாஜக இட்ட பாதையில் செல்வதுபெருத்த ஏமாற்றத்தைத் தருவதாக கூறியுள்ள சீமான்.

தேசிய இனங்களை,இந்து எனும் மாய வலைக்குள் வீழ்த்திட முயலும் பாஜகவை வலிமைகொண்டு மூர்க்கமாக எதிர்த்து அரசியல் செய்யாது, பாஜக செய்யும் அரசியலுக்குள் கரைந்துபோகும் திமுகவின் செயல்பாடுகள் யாவும் வழமையான பிழைப்புவாதமாகும்.

‘ஒன்றியம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தியதைத் தாண்டி திமுக அரசு, பாஜகவை எதிர்த்து வீரியமாய்ச் செய்திட்ட அரசியலென்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கைதுசெய்யக் காட்டிய முனைப்பில் ஒரு விழுக்காடுகூட எச்.ராஜா, சுப்ரமணியசுவாமி விவாகரத்தில் காட்டாததுதான் திமுகவின் மதவாத எதிர்ப்பு அரசியலா? இவ்வாறாக, ஏராளமான வினாக்கள் வரிசைகட்டி நிற்பதாக கூறியுள்ளார்.

ஆகவே திமுக அரசு இனிமேலாவது, ‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக்கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மேற்கு வங்கத்தை ஆளும் அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.