மம்தா பேனர்ஜி தோல்வி பயத்தில் நாடகம் ஆடுகிறார் - பாஜக குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும்.
இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இந்தநிலையில் நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியை மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அப்போது சிலர் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனையடுத்து உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து வாக்கு சாவடிக்கு வெளியே திரண்டு இருந்த மக்கள் முன்னிலையிலேயே ஆளுநர் தன்கரை மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உள்ளூர் கிராம மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தார். உடனடியாக தலையிட்டு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில் ''நந்திகிராம் தொகுதியில் பாஜகவினர் தேர்தல் முறைகேடுகளை செய்கின்றனர். பிஹார் மற்றும் உ.பி.யில் இருந்து வெளியூர் நபர்களை வர வழைத்து திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக முறைகேடுகளை செய்கின்றனர்.

தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று காலை முதல் 60-க்கும் மேற்பட்ட புகார்களை அனுப்பியுள்ளேன். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநரிடமும் புகார் தெரிவித்துள்ளேன்.” எனக் கூறினார். இதனையடுத்து அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி சம்பந்தப்பட்ட அந்த வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: இந்த வாக்குச்சாவடியில் 2 மணிநேரம் வாக்குப்பதிவு நடைபெறாமல் மம்தா பானர்ஜி தடுத்து விட்டார். அவர் செய்வது முழுக்க முழுக்க நாடகம். வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்பதே அவரது எண்ணம். அதனை செய்து விட்டார். இந்த பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் யாரும் இல்லை.
அவர்கள் எந்த புகாரும் தரவில்லை. இருந்தாலும் வாக்குப்பதிவை நிறுத்துவதற்காகவே மம்தா பானர்ஜி புகார் கூறுகிறார்” என்றார்.