"மம்தாஜி என் தலையில் மிதிக்கட்டும்,ஆனால் மக்களின் கனவுகளை மிதிக்க விடமாட்டேன்" - பிரதமர் மோடி பேச்சு
மேற்கு வங்காள மக்களின் கனவுகளை அழிக்க மம்தா பானர்ஜியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார். 294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு வரும் 27ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்காளத்தின் பாங்குராவில் நடைபெறும் தேர்தல் பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் வருகையையொட்டி மேற்கு வங்காளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதன்பின் பிரதமர் மோடி கூட்டத்தினரின் முன் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, என்னால் பார்க்க முடிந்த வரை மக்களை மட்டுமே காண முடிகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக வெற்று அறிவிப்புகளையே தீதி வழங்கியுள்ளார். வங்காள தெருக்களில் எனது தலை மீது தீதி கால் வைத்து கால்பந்து விளையாடுவது போன்று அவருடைய தொண்டர்கள் தெருக்களில் படங்களை வரைகின்றனர்.
தீதி, வங்காளத்தின் கலாசாரம் மற்றும் மரபுகளை நீங்கள் ஏன் புண்படுத்துகிறீர்கள்? மம்தாஜி, நீங்கள் விரும்பினால் என் தலையில் மிதிக்கலாம். ஆனால் வங்காளத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் கனவை மிதிக்க உங்களை நான் விடமாட்டேன் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.