துரியோதனன், துச்சாதனனை விட பாஜகவினர் மோசமானவர்கள் : மமதா ஆவேசம்
மேற்குவங்க இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மமதா பானர்ஜி பாஜகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்துக்கு கடந்த மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்து மமதா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றார்.
ஆனால் அவரே தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனிடையே செப்டம்பர் 30 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் மமதா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வாக்குப் பதிவுக்கு ஒரு மாதத்துக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய மமதா, நாம் போட்டியிட்டு வெல்ல வேண்டும். நாம் எலிகள் அல்ல புலிகள் என உற்சாகமூட்டும் வார்த்தைகளை தெரிவித்தார். மேலும் துரியோதனன், துச்சாதனன் ஆகியோரை விட பாஜகவினர் மோசமானவர்கள்.
அவர்களின் சதி காரணமாக நந்திகிராம் தொகுதியில் நான் போட்டியிட வேண்டியிருந்தது.
தற்போது எனது தொகுதியான பபானிபூர் தொகுதியில் போட்டியிடுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த முறை தேர்தலில் நிச்சயம் வெல்வேன் என்று மமதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை பபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மமதா பானர்ஜி வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.