மமதா பானர்ஜி தனிஒருவராக பாஜகவை சமாளிக்கிறார் - ஜெயா பச்சன் புகழாரம்
தமிழகத்தோடு சேர்த்து மேற்கு வங்கத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. எட்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் மூன்று கட்டங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. மமதா பானர்ஜியின் திரினாமுல் காங்கிரசும், பாஜகவும் நேரடியாக மோதுகின்றன. காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.
உத்தவ் தாக்கரே தொடங்கி அகிலேஷ் யாதவ் வரை பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் இந்தத் தேர்தலில் மமதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொருவரையும் எதிர்க்கும் ஒரே பெண்ணாக மம்தா பானர்ஜி இருக்கிறார் என பாலிவுட் கலைஞரும் மாநிலங்களவை எம்.பியுமான ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக மேற்கு வங்கத்தின் பல இடங்களில், மமதாவுக்கு ஆதரவாக ஜெயா பச்சன் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது அவர், ”வங்க மக்களின் மதம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாஜகவால் பறிக்க முடியாது. இதுபோன்ற மோசமான கொடுமைகளை தனி ஒரு பெண்ணாக நின்று ஒவ்வொருவரையும் சமாளித்து வருகிறார் மமதா பானர்ஜி. இதற்காக அவர் மீது எனக்கு ஒரு தனி அபிமானம் உண்டு. மம்தாவை இந்துக்களின் விரோதி என சித்தரிக்கும் பாஜக, அவரை பேகம் எனவும் பாகிஸ்தானை சேர்ந்தவராகவும் புகார் கூறுவது எடுபடாது.
அவரது ஒரு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், மமதாவின் மனதில் எந்த முறிவும் இல்லை. எனவே, அவர் இங்கு தனிப்பெண்ணாக இருந்து அனைவரையும் சமாளிக்கிறார். இதில் யாரும் அவரை தடுத்து நிறுத்த முடியாது” என்றார். உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் 2004 முதல் தொடர்ந்து நான்காவது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார் ஜெயாபச்சன்.
இவரது பூர்வீகம் மேற்கு வங்கம் ஆகும். இம்மாநிலத்தின் வங்க மொழியில் நன்கு பேசக்கூடியவர்.
இதனால் மமதா பானர்ஜிக்கு தன் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவிக்கவும் பிரச்சாரம் செய்யவும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், ஜெயாபச்சனை அனுப்பி வைத்துள்ளார்.