"மேற்கு வங்கம் அடிபணியாது, பாஜகவால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" - மமதா பானர்ஜி
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக வெறும் 77 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வராக மமதா பானர்ஜி மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது.
இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரழந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகவும் திரிணாமுல் காங்கிரசும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டன.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கம் விரைந்தார். மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க வன்முறை தொடர்பாக அரசிடம் அறிக்கை கேட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய மமதா பானர்ஜி, “பாஜகவால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பதற்றத்தில் உள்ளனர்.

மத்திய படைகளை மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். மேற்கு வங்கம் ஒருபோதும் அடிபணியாது. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள பாஜக தயாராக இல்லை.
நாங்கள் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க மாட்டோம். பாஜக தவறான தகவல்களை, போலி செய்திகளை பரப்பி வருகிறது. ரூ.30,000 கோடி என்பது மத்திய அரசுக்கு பெரிய செலவு அல்ல.
மத்திய அரசு அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க முன்வர வேண்டும். தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.” என்றார்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.