நயன்தாரா படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இந்திய அணி வீரர் தீபக் சாஹரின் சகோதரி அறிமுகமாகிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் கீழ் பல சுவாரஸ்யமான படங்கள் தயாராகி வருகின்றது. மேலும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான 'கூழாங்கல்' படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது. மேலும், அப்படம் நிறைய விருதுகளையும் பெற்று வருகிறது.
இதனிடையே ரவுடி பிக்சர்ஸ் சார்பில் அடுத்ததாக Walking/Talking Strawberry Icecream என்கிற புதிய படம் தயாராக உள்ளது. இது இளைஞர்களின் மனம் கவரும் காதல் படமாக உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் 'சூரரைப்போற்று' படத்தில் 'சே' என்ற கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ண குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். விநாயக் என்கிற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக பிரபல இந்திய அணி வீரர் தீபக் சாஹரின் சகோதரி மால்தி சஹார் அறிமுகமாகவுள்ளார். ஐபிஎல் தொடரில் சிஸ்கே அணி விளையாடும் போட்டிகளை காண மைதானத்திற்கு வரும் மால்தி சஹாரை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இதற்கிடையில் தான் படத்தில் நடிப்பது பற்றி மால்தி சஹார் தனது சமூக வலைத்தள பக்கத்தில், விநாயக் எழுதி இயக்கும் அருமையான படமான #WalkingTalkingStrawberryIcecreamன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களின் தயாரிப்பில் நடிப்பதில் மகிழ்ச்சி. இந்தப்படம் அற்புதமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.