ஆண்களின் விந்தணு உற்பத்தி 50 சதவீதமாக குறைந்தது - வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆண்களின் விந்தணு உற்பத்தி குறைந்து வருவதாக சர்வதேச ஆராய்ச்சி குழு ஒன்று தெரிவித்திருக்கிறது.
விந்தணு 50 சதவீதமாக குறைந்தது
கடந்த செவ்வாய்க்கிழமை Human Reproduction Update இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் 53 நாடுகளிலிருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் அமெரிக்கா, ஆசியா , ஆப்ரிக்க மற்றும் பிற நாடுகளை சேர்ந்த ஆண்களிடம் 7 ஆண்டுகள் (2011 - 2018) இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
குறிப்பாக ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டது. அதில், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் ஆரம்ப கட்டத்தில் காணப்பட்ட மொத்த விந்தணு எண்ணிக்கைகள் மற்றும் விந்தணுவின் செறிவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டதை அந்த தரவுகள் காட்டுகின்றன.
இந்தியாவிலும் வேகமாக சரிந்தது
குறிப்பாக 2000ஆம் ஆண்டுக்கு பிறகே உலகளவில் விந்தணு எண்ணிக்கைகள் மற்றும் விந்தணு செறிவு ஆகியவற்றில் விரைவான சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக தரவுகள் இந்தியாவில் இருந்து தான் பெறப்பட்டதாகவும், இங்கு தான் விந்தணுக்களில் வலுவான மற்றும் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதே நிலை தான் உலக அளவிலும் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, கடந்த 46 வருடங்களில் உலகளவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக விந்தணு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆண்களின் விந்தணு சரிவு என்பது மிக வேகமாக இருக்கிறது என்கிறார் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹீப்ரூ பல்கலைக்கழக்கத்தின் பேராசிரியர் ஹாஹாய் லீவைன்.
விந்தணு எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்படவில்லை என்றார். விந்தணு என்பது கருவுறுதலை மட்டும் குறிப்பிடுவதில்லை இது ஆண்களின் ஆரோக்கியத்தையும் குறிப்பிடுகிறது.
விந்தணு குறைவு என்பது நாள்பட்ட வியாதி என்றும், டெஸ்டிகுலர் புற்றுநோய் மற்றும் ஆயுட்காலம் குறைதல் போன்றவற்றுடன் தொடர்புடையது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.