மொத்தமாக தடை விதிக்கும் மாலத்தீவு; கொதிப்பில் இஸ்ரேல் - பரபர பின்னணி!
இஸ்ரேல் நாட்டவர்களை மாலத்தீவுக்குள் நுழைய தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு தான் மாலத்தீவு. இந்த நாட்டின் அதிபராக முய்சு கடந்தாண்டு பதவியேற்றார். அப்போதிருந்தே பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது.
இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து முழுமையாக வெளியேறியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தொடர்ந்து, அங்குள்ள அமைச்சர்கள் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இஸ்ரேல் கொதிப்பு
அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்து வந்தனர். இதற்கிடையில், இஸ்ரேல் மாலத்தீவு இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மக்கள் தங்கள் நாட்டிற்கு வருவதைத் தடை செய்யும் வகையில் சட்டங்களைத் திருத்த அரசு முடிவு செய்தது.
உடனே, மாலத்தீவில் தங்கியுள்ள இஸ்ரேல் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாலத்தீவு நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலில் இருந்து சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.