போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை விதிப்பு
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வசித்து வரும் மலேசியாவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் ராகவன் என்ற தமிழர் 900 கிராம் எடைகொண்ட மாவுப் பொருளை ஒரு பையில் எடுத்து கொண்டு சிங்கப்பூரைச் சேர்ந்த புங் ஆகியாங் என்ற நபரிடம் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புங் ஆகியாங்கிடம் இருந்த பையை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் 36.5 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பான வழக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கிஷோர்குமார் ராகவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது கட்சிகாரருக்கு அவர் எடுத்து சென்றது ஹெராயின் என்பது தெரியாது என வாதிட்டார். சிங்கப்பூர் சட்டப்படி ஒருவர் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும்.
வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி கிஷோர்குமார் ராகவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்றொரு குற்றவாளி புங் ஆகியாங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.