மந்திர குரல் மலேசியா வாசுதேவன் பிறந்த தினம் இன்று

By Petchi Avudaiappan Jun 15, 2021 02:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

வாசுதேவன் என்றால் தெரியாது. மலேசியா வாசுதேவன் என்றால்தான் பலருக்கும் தெரியும். கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன்.அவரின் பிறந்ததினம் இன்று...

என்னய்யா இது.. பாலுக்கு உடம்பு சரியில்லையாமே.. இப்படி ஆயிடுச்சே" என்று பாரதிராஜா சொல்ல.. ஏன் புலம்பறே.. அமைதியா இரு" என்று சொல்லி பின்னாடி திரும்பினார் இளையராஜா..வாசு.. டிராக் ஒன்னு பாடணும்.. சரியா பாடிடுடா.. அப்படி பாடிட்டா, இந்த பாட்டில இருந்து உனக்கு எல்லாமே வெற்றிதான்" என்று இளையராஜா சொன்னதுதான் மலேசியா வாசுதேவனின் ஏணிப்படியின் துவக்கப்புள்ளி.

மந்திர குரல் மலேசியா வாசுதேவன் பிறந்த தினம் இன்று | Malaysia Vasudevan Birthday Today

16 வயதினிலே படத்தின் செவ்வந்திப் பூ முடிச்சபாட்டும் சரி... ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலும் சரி ரெண்டுமே ஹிட்பாடல்கள். குமாஸ்தா மகள் என்ற படத்தில் ஏபி நாகராஜன் தான் மலேசியா வாசுதேவன் என்ற பெயரை சூட்டினார்.. ஆனால் உச்சிக்கு கொண்டுபோனது இளையராஜாதான். எந்த குரல்வளத்துக்கு என்ன பாடலை தந்தால் சிறப்பாக இருக்கும் என்ற நுட்பமான, துல்லியமான ஞானத்தை பெற்றிருப்பவர் இளையராஜா.. அதனால்தான் ரக ரகமாய் பாட்டுக்களை மலேசியாவாசுதேவனுக்கு தொடர்ந்து வழங்கினார்.

80'களின் காலகட்டத்தில் டீக்கடைபெஞ்சுகளைகூட தாளம் போட வைத்தவர்சுருங்க சொன்னால், பாடும் பாடலின் முதல் வரியை கேட்டால் போதும், மொத்தமாக நம்மை அந்த பாட்டுக்குள்ளேயே இழுத்து சென்று மறக்க செய்துவிடுவார்.. அந்த அளவுக்கு கட்டிப்போடும் மாயவித்தைகாரர். பொதுவாக நடிகர் திலகம் சிவாஜிக்கு டிஎம்எஸ்தான் ஆஸ்தான பாடகராக இருந்தார்.. பலர் அவருக்காக பாடியிருந்தாலும், 'தேவனின் கோயிலிலே', ஒரு கூட்டுக்கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக' போன்ற மலேசியா வாசுதேவன் பாடல்கள் அபாரமாக பொருந்தியது. 

மந்திர குரல் மலேசியா வாசுதேவன் பிறந்த தினம் இன்று | Malaysia Vasudevan Birthday Today

'முதல் மரியாதை'யில் எல்லா பாடல்களையுமே மலேசியாதான் பாடியிருந்தார்.. இனி தொடர்ந்து தனக்கான பாடல்களை மலேசியாதான் பாட வேண்டும் என்று சிவாஜி கணேசன் அறிவித்தாராம். வா வா வசந்தமே'... பாடலை கேட்டால் நிம்மதியின் வாசலுக்குள் நுழையலாம்.

'ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு.. பாடல் கேட்டால் அண்ணன்கள் கண்ணில் தானாக நீர் வழியும்.. 'ஆயிரம் மலர்களே மலருங்கள்' பாடலில் ஜென்சியின் குரல் தனித்தன்மையாக தெரிந்தாலும், மலேசியாவன் சிம்மக்குரலிலும் சோகமும், ஏக்கமும் இழையோடியதை உணர முடியும் அடுத்தவாரிசு படத்தில் இவர் பாடிய ஆசை நூறுவகை பாட்டு, எழுந்து ஆடவைத்துவிடும்.

ரஜினிக்கு சொல்லி அடிப்பேனடி என்னோட ராசி நல்லராசி’ பாடல்கள் ரஜினியே பாடுவது போல் அமைந்தது. கங்கை அமரன் இசையில்பாக்யராஜ் இயக்கத்தில்சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் காதல் வைபோகமேபாடல், இன்றைக்கும் குதூகலப்படுத்தும் பாடல். பாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்பையும் விட்டு வைக்கவில்லை.. கிட்டத்தட்ட 85 படங்களில் நடித்துவிட்டார்.. 4 படங்களுக்கு இசையும் அமைத்துவிட்டார்.

இதெல்லாம் தமிழக மக்களுக்கு பெரும்பாலும் தெரிந்த செய்திதான்.. ஆனால், தெரியாத ஒரு பக்கம் உண்டு. அதுதான் அவரது ஈர மனசு.. ஆரம்ப காலத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் ஆல்பம் வெளிவர அடிப்படை காரணமாக இருந்ததே மலேசியா வாசுதேவன்தானாம்.

எத்தனையோ உதவிகளை முகம் தெரியாத நபருக்கு செய்துள்ளார். அடிப்படையிலேயே மிகச்சிறந்த மனிதர்.. ஈகோ இல்லாதவர்.. எந்த உயரத்துக்கு சென்றாலும், தன்னிலை மறக்காதவர்.. முகஸ்துதி என்பது துளியும் இருக்காது.

ஒரு பேட்டியில் வாசு தேவன் கூறும் போது 'கனவோடுதான் இந்தியா வந்தேன்... ஆனால் ஏறத்தாழ 8 ஆயிரம் பாட்டு பாடிட்டேன்.. எவரெஸ்ட் சிகரெத்தின் மீது ஏறவில்லை என்ற குறை எனக்கு இல்லை... ஆனால் பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறை உள்ளது. அது போதும்...' என்ற ஆத்மதிருப்தி வார்த்தைகள்தான் எத்தனை பேருக்கு வெளிப்படும் என்று தெரியவில்லை.

விதிவசத்தினால்... 1989ல் 'நீ சிரித்தால் தீபாவளி'என்ற படத்தை தயாரித்து, தோல்வியை சந்தித்தார்.. வீடு வாசல் இழந்தார்.. உடல்நலம் குன்றியது... நாளடைவில் பக்கவாதம் தாக்கியது... படுத்த படுக்கையானார்.. ஆனால் அவரது மனம் மிக கூர்மையானதாகவே இருந்தது.. ஆரம்ப காலம் முதலே தனக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் முதல் திரையுலகில் தன்னை வந்து சந்திக்கவில்லை என்று மலேசியா வாசுதேவன் வருத்தப்பட்டதாககூட செய்திகள் வந்தன.

பொதுவாக மிகச்சிறந்த ஆளுமைகளின் அருமை அவர் வசிக்கும் காலத்திலேயே உணரப்படுவதில்லை என்பதுதான் கசப்பான வரலாற்று உண்மை!! ஆனால்... அழுத்தமான குரலில், இனம் புரியாத சோகத்துடன் இந்த மாயமந்திர குரலோன் பாடிய 'பூங்காற்று திரும்புமா' பாடல் ஒலிக்கும் போது மனது மேலும் சிறிது வலிக்கத்தான் செய்கிறது....