பிரபல மலையாள நடிகர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
மலையாளத்தில் வில்லன் வேடங்களில் நடித்த நடிகர் ரிச பாவா உடல் நிலை குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். மலையாளத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமான ரிச பாவா, தமிழிலும் காசு, தென்றல் வரும் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ரிச பாவா. இவர் கடந்த 1990-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கிய ‘டாக்டர் பசுபதி’படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
பின்னர் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானார். ‘இன் ஹரிகர் நகர்’படம் அவருக்கு மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுக் கொடுத்தது. 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பின்னர் டி.வி. சீரியல்களில் நடித்தார். தமிழில் காசு, தென்றல் வரும் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருது பெற்றார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பபட்டு சிகிச்சை பெற்றார். நேற்று மாலை திடீரென இவரது உடல்நிலை மோசமானது.
டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 55. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மரணம் அடைந்த ரிச பாவாவுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.