''இந்த முறை நிச்சயம் குறி தப்பாது'' : மலாலாவுக்கு மீண்டும் பகீரங்க கொலை மிரட்டல்!
2012ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த 14 வயது சிறுமி மலாலா தாலிபான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானார். தலையில் குண்டு பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய மலாலா பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். அவரைச் சுட்ட தீவிரவாதி இஸானுல்லா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு போலீஸ் காவலில் இருந்து அவன் தப்பித்துவிட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள தீவிரவாதி இஸானுல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் மலாலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில் மலாலா மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள தீவிரவாதி இஸானுல்லா, மலாலாவுடனும் அவரது தந்தை உடனும் தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்று நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறை நிச்சயமாக தங்களது குறி தப்பாது என்றும் பகீரங்கமாக அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை மிரட்டல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மலாலா, ஏரளாமான கொலை வழக்குகளில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளி சிறையில் இருந்து எப்படி தப்பிக்க முடியும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
This is the ex-spokesperson of Tehrik-i-Taliban Pakistan who claims responsibility for the attack on me and many innocent people. He is now threatening people on social media. How did he escape @OfficialDGISPR @ImranKhanPTI? https://t.co/1RDdZaxprs
— Malala (@Malala) February 16, 2021
கொலை மிரட்டலை அடுத்து தீவிரவாதி இஸானுல்லாவின் பக்கங்களை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது. இதனிடையே மலாலாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட ட்விட்டர் பக்கம் போலியானது என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. தீவிரவாதியின் தாக்குதலுக்கு பிறகு பிரிட்டன் அரசு அடைக்கலம் அளித்ததை அடுத்து மலாலா லண்டனில் வசித்து வருகிறார்.
பெண் சுதந்திரம், பெண் குழந்தைகளுக்கு கட்டாய கல்வி குறித்து மலாலா உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பு ஒன்றை உருவாக்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.