தாலிபான் தாக்குதலால் மீள முடியாமல் தவிக்கும் மலாலா - 9 வருடமாக தொடரும் சோகம்
தாலிபான்களின் நேரடி தாக்குதலுக்குள்ளாகி 9 ஆண்டுகளாகியும் அந்த பாதிப்பில் இருந்து என்னால் மீளமுடியவில்லை என்று மலாலா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தபிறகு அங்கு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை எனக் கருதி ஆயிரக்கணக்கான மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இதனிடையே உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தாலிபான்களின் நேரடி தாக்குதலுக்குள்ளான மலாலாவும் தனது குரலை பதிவு செய்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாலிபான்களின் நேரடி தாக்குதலுக்குள்ளாகி 9 ஆண்டுகளாகியும், அந்த பாதிப்பில் இருந்து என்னால் மீளமுடியவில்லை என்றும், அதற்காக இதுவரை என் தலையில் ஆறு அறுவை சிகிச்சை செய்துள்ளேன் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, போஸ்டன் நகரின் எனக்கு 6வது அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. தாலிபான்கள் சேதப்படுத்திய என்னுடைய உடலை மருத்துவர்கள் தொடர்ந்து சீர்படுத்தி வருகின்றனர் எனக்கூறி சிகிச்சையில் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
என்னுடைய இதயம் நொறுங்குகிறது. யாரென்றே தெரியாமல் போனவர்களுக்காகவும், வரலாற்றில் நாம் மறக்கப்போகும் நபர்களை எண்ணியும், உதவி வேண்டி அழுது கொண்டிருப்பவர்களுக்கு விடையில்லாமல் இருப்பதையும் நினைத்து என் இதயம் நொறுங்குகிறது என மலாலா உருக்கமாக கூறியுள்ளார்.
என்னால் இன்னும் அந்தநாளை மறக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.