மக்களுடன் முதல்வர் திட்டம்...முக ஸ்டாலின் வெளியிட்ட 15 சிறப்பு அறிவிப்புகள் இதோ!
மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மக்களுடன் முதல்வர் திட்டம்
தமிழக மக்களின் கோரிக்கைகளை கேட்டு உடனுக்குடன் செயல் படுத்துவதற்காக முதலமைச்சரின் முகவரி என்ற துறை உருவாக்கப்பட்டது. இந்த துறை மூலம் லட்சக்கணக்கான புகார்கள், கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அரசின் சேவைகள் மக்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் கிடைக்க மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது இந்த திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக பேசினார். மேலும், அந்த மாவட்டத்திற்கான சிறப்பு திட்டங்களையும் அறிவித்தார்.
15 சிறப்பு அறிவிப்புகள்
“51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தருமபுரி - வெண்ணம்பட்டி சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மோபிரிபட்டி, தொட்டம் பட்டியை இணைத்து அரூர் பேரூராட்சி அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படும். சிட்லிங், அரசநத்தம் பகுதிகளில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, வரகு, சாமை ஆகியவற்றை மதிப்புகூட்டு பொருளாக்க கிடங்கு மற்றும் பொது செயலாக்க மையம் அமைக்கப்படும்.
தீர்த்த மலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும். பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
இந்த ஏழு அறிவிப்புகளுடன் இன்று என்னிடம் இந்த பகுதி மக்கள் அளித்த கோரிக்கைகளையும் ஏற்று மொத்தம் 15 அறிவிப்புகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.