தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு? - மக்கள் நீதி மய்யம்

Kamal Haasan Government Of India
By Thahir Aug 02, 2022 10:04 AM GMT
Report

மத்திய அரசு தமிழ் மொழியை புறக்கணிப்பதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் அறிக்கை

அந்த அறிக்கையில், இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார்.

Narendra Modi

ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன.

மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார உறவுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) அமைப்பில் 1970 முதல் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இந்தியப் பேராசிரியர்களுக்கான வருகை தரு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்த மதம், இந்தியக் கல்வி உள்பட 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன. 2014-க்குப் பிறகு இருக்கைகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, தற்போது 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன.

இதில் ஹிந்திக்கு 14 இருக்கைகளும், சமஸ்கிருதத்திற்கு 5 இருக்கைகளும், இந்தியக் கல்விக்கு 26 இருக்கைகளும், பிற இருக்கைகளுக்கு 6 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐசிசிஆர் இணையதளத்தில் உள்ள இப்பட்டியலில் செம்மொழியான தமிழ் இடம்பெறவே இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி!

இப்படி பல்வேறு விஷயங்களில் தமிழ் மொழியைப் புறக்கணிப்பது மத்திய அரசுக்கு அழகல்ல! எல்லா மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம்.

மத்திய அரசும், அமைச்சர்களும் இனியாவது இவ்விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு, தமிழ்ச் செம்மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன், தமிழ் மொழி மேம்பாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.