காங்கிரசுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் மக்கள் நீதி மய்யம்
சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து களமிறங்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், காங்கிரஸ்- திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் இருக்கிறது. காங்கிரஸ் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டதாகவும், திமுக 23 தொகுதிகளை கொடுக்க முன்வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் இதுவரையிலும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாத நிலையில், திமுக தங்களை நடத்தும் விதம் வருத்தம் அளிப்பதாக கே.எஸ்.அழகிரி கண்ணீர் சிந்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைமையிலான மூன்றாவது கட்சிக்கு, காங்கிரஸ் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்றாவது அணியில் சமக, ஐஜேக கட்சிகள் இடம்பெற்றுள்ளன, இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரசுடன் வெவ்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சி.கே.குமரவேல் குறிப்பிட்டுள்ளார்.