மக்கள் நீதி மய்யம் கட்சியில் 2-வது வேட்பாளருக்கு கொரோனா தொற்று
சென்னை அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வெ. பொன்ராஜ் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து தூக்கமில்லாத இரவுகளால், தேர்தல் பணிகளால் உடல்நலம் சரி இல்லாமல் காய்ச்சலுக்கும், உடம்பு வலிக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன்.
எனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த இக்கட்டான தேர்தல் நேரத்தில் குறுகிய காலத்தில், நான் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் அண்ணா நகர் தொகுதி மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால் களத்தில் மக்கள் நீதி மையத்தின் படைவீரர்கள் அண்ணா நகர் தொகுதி முழுக்க உங்கள் வீடு தேடி வந்து உங்களை சந்திப்பார்கள்.
அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றி. நான் நேரடியாக வர முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன் கூடிய சீக்கிரம் குணமடைந்து தேர்தலுக்கு முன்பாக உங்களை வந்து கண்டிப்பாக சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு நான் வர இயலாத சூழ்நிலையை பொறுத்தருள வேண்டுகிறேன். ஆனால் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழக மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
என அவர் அந்த அறிவிக்கையில் கூறியுள்ளார்.
கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் கமல்ஹாசனுடன் பொன்ராஜ் பங்கேற்றிருந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ்பாபு ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 2-வது வேட்பாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.