சாமியே சரணம் ஐயப்பா..! விண்ணை முட்டும் பக்தர்களின் கோஷம் - சபரிமலையில் மகரவிளக்கு பூஜை
சபரி மலையில் வரும் 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை ஆரம்பமாக உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது.
சபரிமலையில் குவியும் பக்தர்கள்
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஜனவரி 14-ம் தேதி இரவு 8.45 மணிக்கு இடம்பெயர்ந்து செல்லும் வேளையில் சபரிமலையில் சங்கராந்தி சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
இந்த பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். சபரிமலையில் மகரவிளக்கு பூஜை வரும் 14-ம் தேதிவரை நடைபெறுகிறது.
மகரவிளக்கு பூஜைக்கான சுத்தி கிரியைகள் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 12-ம் தேதி பிரசாத சுத்தியும், 13-ம் தேதி பிம்ப சுத்தி பூஜைகளும் நடைபெறுகின்றன.
வரும் 12-ம் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரண யாத்திரை புறப்பட்டு வரும் 14-ம் தேதி மாலை சபரிமலை சென்றடைகிறது.
அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணம் சார்த்தப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். அப்போது விண்ணில் மகர நட்சத்திரம் தெரியும், இதனை தொடர்ந்து ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிக்கும் மகரவிளக்கு தரிசனம் நடைபெறும்.
ஆன்லைன் முன்பதிவு நிறைவு
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரி மலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 14 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு கடந்த 2 நாள்களுக்கு முன்பே முடிவடைந்தது.
இனி மகரஜோதி தரிசனம் காண விரும்பும் பக்தர்கள் உடனடி பதிவு மட்டுமே செய்து கொள்ள இயலும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.