சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்ப்பானம் குடித்ததால் மரணமா? - கோவில்பட்டி தாய் - மகள் விவகாரத்தில் திடீர் திருப்பம்
கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்ப்பானம் குடித்ததால் தாய் - மகள் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம் மற்றும் மகள் தர்ஷினி இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 12 ஆம் தேதி சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த போது திடீரென இருவரும் மயங்கி விழுந்தனர்.
அவர்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேவி, குளிர்பானம் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்ததில் அவரது வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் என்பவர் கற்பகத்திற்கு தன்னுடன் இருக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், ஏற்கனவே கற்பகத்திற்கும், வீரப்பெருமாளுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதன் பின்னர் கற்பகம் வீரப்பெருமாளுடன் பேசுவதை தவிர்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது எடுத்த படம் மற்றும் வீடியோவை வைத்து வீரப்பெருமாள் மிரட்டி வந்தது தெரியவந்தது. தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் படம் மற்றும் வீடியோ காண்பித்து விட்டால் அவமானம் ஏற்பட்டு விடும் என்ற கருதிய கற்பகம் சாப்பிட்ட சாப்பாடு அல்லது குளிர்பானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீசார் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.