கைது செய்யப்படுவாரா மகிந்த ராஜபக்ச ? - போராட்டக்காரர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக நீதிமன்றத்தில் புகார்!
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக மகிந்த ராஜபக்சவை கைது செய்யக்கோரி நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மக்களின் கடுமையான போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார்.
இதனையடுத்து மகிந்த ராஜபக்ச ஆதரவு அரசியல்வாதிகளை டார்கெட் செய்து பொதுமக்கள் தாக்க தொடங்கினர். அரசுக்கு எதிரான இந்த போராட்டம் வன்முறையாக மாறி 100-க்கும் அதிகமான ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டன.
இதனையடுத்து மகிந்த ராஜபக்ச கொழும்பை விட்டு தப்பி ஓடி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் இதனை இலங்கை அரசு தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச , முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ச, சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த மற்றும் காவல்துறை தலைவர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் இலங்கையை விட்டு வெளியே செல்ல தடை விதிக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கம் கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் இலங்கையைவிட்டு வெளியேற தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனால் இலங்கையைவிட்டு மகிந்த ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் இலங்கையை விட்டு தப்பி ஓட முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜப்கசவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக மகிந்த ராஜபக்ச மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சேனகா பெரேரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொழும்பு குற்றவியல் நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நீதிபதியிடம் முறையிட உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.