கர்மா சும்மா விடுமா...? - ஆட்டம் ஆடினாயே... என்ன ஆயிற்று உங்கள் இனவெறி...? - ராஜபாக்சேவை தாக்கிய டி.ராஜேந்தர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில 10 ஆண்டுகளில் தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள் தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், ‘கோ கோத்தபய கோ’ என்று கோஷங்களை முழங்கிக்கொண்டு வருகிறார்கள். மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சே பதவி விலக கோரியும் மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர், இலங்கை அதிபர் ராஜபக்சேவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது -
இலங்கையில் 1 லிட்டர் பால் 1600 ரூபாய். 1 கிலோ கோழிக்கறி 1000 ரூபாய். பெட்ரோல் விலை 350 ரூபாய். கேஸ் சிலிண்டருக்கு 5000 ரூபாய். இலங்கை மக்கள் ரொம்ப பாடுபடுகிறார்கள். கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு படுகொலை நடந்ததே. அதை மறக்க முடியுமா?
இன்று ஆட்சியாண்டுக் கொண்டிருக்கும் அதிபர் ராஜபக்சே, தமிழ் மக்களை சமாதானம், சமாதானம் செய்ய அழைக்கிறோம் என்று கூறிக்கொண்டு சமாதானக்கொடியை ஏந்தி வந்த என் தமிழ் இன மக்களை முல்லிவாய்க்கால் பகுதியில், கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேரை வெட்டிச்சாய்த்தார்கள். முள்ளிவாய்க்காலில் ரத்த வாய்க்கலாக ஓடவிட்டார்கள்.
40 ஆயிரம் பேர் ஆன்மா சும்மா விடுமா? அந்த உயிர் திரும்பி வருமா? ராஜபக்சே கடந்த 2009ம் ஆண்டு ரொம்ப ஆட்டம் ஆடினார். இன்று 2022ம் ஆண்டு உன் ஆட்சி ஆடுது ஆட்டம். இதுதான் கர்மா.. சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுவிட்டோம் என்று அதிபராக கொக்கரித்தாயே... என்ன ஆயிற்று உங்கள் இனவெறி.
இவ்வாறு டி.ராஜேந்தர் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.