இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தாரா? - நடந்தது என்ன?
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செ்ய்ததாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி அரசுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார்கள். இதனால் நேற்று முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், இதற்கான கடிதத்தை அதிபர் கோத்பய ராஜபக்சேவிடம் வழங்கியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் மகிந்த ராஜபாக்ச ராஜினாமா கடிதம் வழங்கவில்லை என இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.