பிரதமர் வீட்டில் இருந்து ராஜபக்ச வெளியேறினார் - வெளிநாடு தப்பி செல்ல திட்டமா?
இலங்கையில் பிரதமர் மாளிகையான அலரி மாளிகையை விட்டு மகிந்த ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி தங்களது எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் காட்டி வருகின்றனர்.
இலங்கையில் இந்த நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் அரசு பதவிகளில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு சில தினங்களுக்கு முன் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச விலகியுள்ளார். முன்னதாக கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல் பிரதமரின் ஆதரவாளர்களும் அங்கு திரண்டு பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதனால் போராட்டக்காரர்களை ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்கினர். இதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது .
உடனடியாக போலீசார் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர். இதனையடுத்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையில் போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.