இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சேவை நீக்க அதிபர் கோட்டபய ராஜபக்சே ஒப்புதல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில 10 ஆண்டுகளில் தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள் தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், ‘கோ கோத்தபய கோ’ என்று கோஷங்களை முழங்கிக்கொண்டு வருகிறார்கள்.
மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சே பதவி விலக கோரி, கொழும்பு காலிமுகத் திடலில் இரவும் பகலுமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
மேலும், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், 2 நாட்களுக்கு முன்பு, என்ன ஆனாலும், நான் பிரதமர் பதவியிலிருந்து விலகவே முடியாது என்றும், என் தலைமையில்தான் இடைக்கால அரசாங்கம் அமையும் என்றும் ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இவரின் இந்தப் பேச்சக்கு பவுத்த பிக்குகள் உள்ளிட்ட பல தரப்பினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க அதிபர் கோட்டபய ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் கோட்டபய ராஜபக்சே இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
