82 மாணவர்களுக்கு பாதி மொட்டை: மகாராஷ்டிரா பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்
மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டம் சிமூர் தாலுகாவில் உள்ள ஜம்புல்காட் அரசுப் பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் 82 மாணவர்களுக்கு பாதி மொட்டை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் முடிதிருத்தும் பணியின்போது சில மாணவர்கள் வரிசையில் நிற்காமல் விளையாடியதால், ஆத்திரமடைந்த விடுதி கண்காணிப்பாளர் அவர்களின் தலைமுடியைப் பாதியாக வெட்டுமாறு முடிதிருத்துபவருக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தகவலறிந்த உயர் அதிகாரிகள் தலையிட்டு, மாணவர்களின் தலைமுடியைச் சீராக வெட்ட உத்தரவிட்டனர்.
அதன்படி, சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை மீண்டும் முடிதிருத்தம் செய்யப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டது.
இச்சம்பவத்திற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
இதனிடையே, மாணவர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விடுதி கண்காணிப்பாளர் பிரசாந்த் மேஷ்ராம் விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், சம்பவம் தொடர்பாக அவரிடம் விளக்கம் கோரி பள்ளி முதல்வர் காரணம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.