அரசு ஊழியர்கள் ஹலோ என்பதற்கு பதிலாக வந்தே மாதரம் சொல்லவும் : மகாராஷ்டிரா அமைச்சர் உத்தரவு

India Maharashtra
By Irumporai Aug 15, 2022 05:23 AM GMT
Report

மகாராஷ்டிராவில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அழைபேசியில் பேசும்போது, ஹலோ என கூறாமல் வந்தே மாதரம் என சொல்ல வேண்டும் என அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனால், கடந்த 9ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதில் 9 பேர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 9 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் நேற்று அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் ஹலோ என்பதற்கு பதிலாக வந்தே மாதரம் சொல்லவும் :  மகாராஷ்டிரா அமைச்சர் உத்தரவு | Maharashtra Govt Vande Matarami Nstead Of Hello

கலாச்சாரத்துறை பாஜகவின் சுதிர் முங்கந்திவாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அமைச்சராக சுதிர் முங்கந்திரவாரு பொறுப்பேற்றதும் அதிரடியான ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

ஹலோவுக்கு பதிலாக வந்தே மாதரம்

மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் செல்போனில் பேசும் போது, ஹலோ என தொடங்க கூடாது என்றும் வந்தே மாதரம் என சொல்லி பேச்சை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம்.

76வது சுதந்திர தினத்துக்குள் நுழைகிறோம். செல்போனில் பயன்படுத்தும் ஹலோ எனும் சொல் ஒரு ஆங்கில வார்த்தை. இதை விட்டுவிட வேண்டும். இதற்கு பதில் வந்தே மாதரம் எனும் வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

இது எனது விருப்பம். வந்தேமாதரம் என்பது வெறும் வார்த்தையல்ல. ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்கும் உணர்வு. இதன்மூலம் நாட்டின் மீதான பற்று அதிகரிக்கும் என விளக்கமளித்தார்.