இனி 10 ஆம் வகுப்பில் 20 மார்க் எடுத்தாலே பாஸ்; அரசின் புதிய முடிவு - ஆனால் ஒரு சிக்கல்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்ணை 20 ஆக குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
10 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 35 ல் இருந்து 20 ஆக குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் இடை நிற்றலை தடுக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.
இடை நிற்றல் குறையும்
100 க்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி வழங்கப்படும் என்று உள்ள நிலையில் 35 மதிப்பெண் எடுக்க முடியாமல் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் ஏராளமானோர் கல்வியைக் கைவிடுகின்றனர்.
இதனால் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க முடிவு செய்து, கணிதம் மற்றும் அறிவியலில் மாணவர்கள் 20 மதிப்பெண்கள் பெற்றாலே, அவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும்.
ஏற்கெனவே இந்த திட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும் உடனடியாக இந்த நடைமுறை அமலுக்கு வராது. மாநிலம் முழுவதும் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது இந்த முறையும் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் அம்சம்
ஆனாலும் அந்த மாணவர்களால் தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளைப் படிக்க முடியாது. கலை, மானுடவியல் சார்ந்து அந்த மாணவர்கள் படிப்புகளைத் தொடரலாம் என கூறப்படுகிறது.
இந்த நடைமுறை கூடுதல் அம்சம் மட்டுமே, இந்த நடைமுறையை விரும்பாத தேர்வர்கள், துணைத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்று, புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
அரசின் இந்த புதிய நடைமுறையால் இடை நிற்றல் குறைவதோடு, அந்த மாணவர்கள் அறிவியல் கணிதம் அல்லாத வேறு துறைகளில் சிறந்து விளங்கலாம் என இந்த திட்டத்திற்கு ஆதரவு குரல் எழுந்துள்ளது. அதே வேளையில், கணிதமும் அறிவியலும்தான் முக்கிய பாடங்கள். அதில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்கும்போது கற்றல் தரம் நிச்சயம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது.