ஒரே வாரத்தில் வழுக்கை தலையான 3 கிராம மக்கள் - என்ன காரணம்?
3 கிராம மக்கள் திடீரென முடி கொட்டி வழுக்கை தலையாக மாறியுள்ளனர்.
முடி உதிர்தல்
மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு திடீரென முடி உதிர்ந்ததால் வழுக்கை ஏற்பட்டது.
['
ஷெகாவ்ன் தாலுகாவில் அமைந்துள்ள போர்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா ஆகிய கிராமங்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கடந்த ஒரு வாரமாக திடீரென முடி கொட்ட தொடங்கியுள்ளது.
நீர் ஆய்வு
இது கிராம மக்களிடையே பரவலான அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர், தொல்லியல் , சுகாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். 50க்கும் மேற்பட்டோர் இந்த திடீர் முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பேசிய ஷெகாவ்ன் சுகாதார அதிகாரி டாக்டர் தீபாலி ரஹேகர், அசுத்தமான நீர் இதற்கு காரணமாக இருக்கலாம். அந்த பகுதியில் உள்ள நீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
முடி உதிர்தல் குறித்து தகவல் கிடைத்ததும், முதற்கட்ட விசாரணைக்காக ஒரு தோல் நிபுணர் மற்றும் ஒரு தொற்றுநோயியல் நிபுணரை கிராமத்திற்கு அனுப்பினோம். பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 99 சதவீத பேருக்கு உச்சந்தலையில் பூஞ்சை தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் முடி உதிர்வதை அனுபவிக்கிறார்கள் என மாவட்ட சுகாதார அதிகாரி அமோல் கீதே தெரிவித்தார்.
பூஞ்சை தொற்று
திடீரென முடி உதிர்தலுடன் தொடர்புடைய பூஞ்சை தொற்றுக்கான சரியான காரணத்தை கண்டறிய, கிராம மக்களிடமிருந்து முடி மற்றும் தோல் மாதிரிகளை சேகரித்து துல்லிய ஆய்விற்காக அகோலா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தண்ணீரில் கன உலோகங்கள் கலந்திருந்தால் அவை இது போன்ற பூஞ்சை தொற்றுநோயை ஏற்படுத்தும் என்பதால் தற்போதுள்ள குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என்றும், மாற்றுகுடிநீரை ஏற்பாடு செய்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க, தோல் பராமரிப்பு நிபுணர்களுடன் சுகாதாரத் துறை இணைந்து செயல்பட்டு வருகிறது.