கேரளாவில் 23 பேரை கொன்ற மூர்த்தி யானை; அரவணைத்த முதுமலை - உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் மூர்த்தி என்ற வளர்ப்பு யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.
யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகளுடன் மூர்த்தி என்ற மக்னா யானையும் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 1998ம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வந்த அந்த யானை 58 வயதை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்த மூர்த்தி யானை கடந்த 1998ம் ஆண்டுக்கு முன்னர் கேரளாவில் 23 பேரை கொன்று ஆட்கொல்லி யானையாக இருந்தது. இதனால் அந்த யானையை சுட்டுப்பிடிக்க கேரள முதன்மை வனப் பாதுகாவலர் உத்தரவிட்டார்.
ஆனால் யானை அதே நாளில் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்குள் நுழைந்து 2 பேரை கொன்றது. இதனையடுத்து 1998ம் ஆண்டு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
நல்லடக்கம்
இதனை தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தி என்ற மருத்துவர் யானைக்கு சிகிச்சை அளித்தார். அதன் அடிப்படையில் அந்த யானைக்கு மூர்த்தி என பெயரிடப்பட்டது. மூர்க்கத்தனமாக இருந்த மூர்த்தி யானை, முதுமலை முகாமுக்கு வந்து பழக்கப்படுத்திய பின்பு சாதுவாக மாறியது.
இந்நிலையில் வயது முதிர்வால் கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மூர்த்தி யானை, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தது. குழந்தைபோல் பழகி வந்த மூர்த்தி யானையின் உயிரிழந்தது யானை பாகன்கள், அப்பகுதி பழங்குடியின மக்கள் மற்றும் யானையை பராமரித்து வந்த காவடிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து இறந்த யானைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அரசு மரியாதையுடன் வனத்துறை அதிகாரிகள் அடக்கம் செய்தனர்.