கண்களை கட்டி கொண்டு தொடர்ந்து எட்டு மணிநேரம் மேஜிக் செய்து சாதனை
இந்திய அளவில் மேஜிக் கலையில் விருது பெற்று கோவை திரும்பிய மேஜிக் நிபுணர் டிஜோ வர்கீஸிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கோவை மாவட்டம் குனியமுத்துார் பகுதியை சேர்ந்தவர் மேஜிக் நிபுணர் டிஜோ வர்கீஸ். இவர் கடந்த 25 ஆண்டுகளாக மேஜிக் செய்து வருகிறார். இவர் மேஜிக் உலகில் தனக்கென தனி அடையாளம் ஏற்படுத்தி வருகிறார்.
இவர் கண்களை கட்டிக்கொண்டு அபாயகர மேஜிக்குகளை செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டு என பல்வேறு உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் இந்திய அளவில் முதன்முறையாக இவர் புனேவில் நடைபெற்ற விழாவில் IERCT எனும் இந்திரபிரஸ்தா எஜுகேஷனல் ரிசர்ச் சேரிட்டபிள் டிரஸ்ட்டின் விருதை இவர் தற்போது பெற்றுள்ளார்.
புனேவில் இதற்கான விருது வாங்கி கோவை விமான நிலையம் வந்த இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் டிஜோ வர்கீஸ் பேசுகையில், மேஜிக் கலையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி இருக்கிறேன்.
இதுவரை உலகளவில், 1 மணி நேரம், நான்கரை மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து வேகமாக மேஜிக் செய்து சாதனை செய்தேன். தற்போது 8 மணி நேரம் தொடர்ந்து கண்களை மூடிக்கொண்டு மேஜிக் செய்து சாதனை செய்துள்ளேன் என தெரிவித்திருக்கிறார்.
மேஜிக் கலைஞர் டிஜோ வர்கீஸ் மேஜிக் வித்தைகள் மட்டுமின்றி படம் வரைவது, தன் எதிரில் உள்ளவர்களின் ஆழ்மனதை தெரிந்து கொள்வது போன்ற வித்தைகளும் கற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது