இனிமேல் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500.., ஆகஸ்ட் பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு
ஆகஸ்ட் மாதம் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை
கடந்த திமுக ஆட்சியில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்பத் தலைவிகளிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதனால், வரும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.