கொரோனா வைரசுக்கு புதிய மருந்து..! உயிருள்ள பாம்பை ரசித்து ருசித்து சாப்பிட்ட நபர் கைது..!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கொரோனா வைரசுக்கு அரிதான மருந்து எனக்கூறி உயிருள்ள பாம்பை ரசித்து சாப்பிட்ட நபரின் வீடியோ வைரலானதால், அந்த நபருக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வடிவேலு என்பவர் அப்பகுதி வயல்வெளியில் சுற்றி திரிந்த பாம்பு ஒன்றினை உயிருடன் பிடித்து கொரோனா நோய்க்கு அரிய மருந்து என கூறி அதனை கடித்து ரசித்து முழுவதுமாக வாயில் போட்டு சாப்பிட்டுள்ளார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் பதைபதைக்க செய்தது. பீயர் கிரில்ஸை மிஞ்சும் அளவுக்கு சின்ன வாலை கூட விடாமல் முழுவதுமாக மென்று முழுங்கிய இவரது வீடியோ காட்சிகள் பலரையும் முகம் சுழிக்கவும் செய்தது.
இதனை கண்ட வனத்துறையினர் அதிரடியாக அந்த நபரை கைது செய்து அவருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து வடிவேலு, தான் குடிபோதையில் தெரியாமல் செய்து விட்டதாகவும், மன்னித்து விடுங்கள் எனவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.