மதுரை நகைக்கடை திருட்டு: இருவர் கைது- நகைகள் மீட்கப்பட்டது எப்படி?

Madurai
By Fathima Nov 14, 2026 12:53 PM GMT
Report

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடந்த திருட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் செயல்படும் தனிஷ்க் நகைக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 மணியளவில் நபர் ஒருவர் புகுந்து 15 கிலோவுக்கும் அதிகமான நகைகளை திருடி சென்றார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலிசாரின் அதிரடி சோதனையில் நபர் ஒருவர் ஸ்கூட்டியில் செல்வது கண்டறியப்பட்டது.

அதனை ஆதாரமாக கொண்டு மேலும் விரிவான விசாரணை நடைபெற்ற போது குறித்த நபர் மாறுவேட்டத்தில் மூன்று முறை கடைக்கு வந்தது சிசிடிவியில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது, அந்த நபரை ஊழியர் ஒருவர் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.

மதுரை நகைக்கடை திருட்டு: இருவர் கைது- நகைகள் மீட்கப்பட்டது எப்படி? | Madurai Tanishq Showroom Robbery Latest Update

இதன் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தியதில் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக நிஷாந்த் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.

இவருடன் தொடர்பில் இருந்த மீனாட்சி, சுரேஷ் இன்று கைது செய்யப்பட்டனர், அவர்களிடம் இருந்து முதலில் 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து மீனாட்சியிடம் நடத்திய விசாரணையில் மற்ற நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

நிஷாந்துக்கு சொந்தமான வயலில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டன.

இதனையடுத்து தலைமறைவாகியுள்ள நிஷாந்த்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.