குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்த மகனை கல்லால் அடித்து கொலை செய்த தந்தை - பரபரப்பு சம்பவம்
மதுரை மாவட்டம், சென்னகரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (65). இவரது மகன் ராஜமாணிக்கம் (35). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர்.
ராஜமாணிக்கம் குடி பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்து வந்து வீட்டில் இருக்கும் மனைவியிடம் சண்டை செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இவர் மனைவியை அடிக்கும் போது யாராவது வந்து தட்டிக்கேட்டால் அவரிடமும் இவர் வம்பு இழுத்து விடுவார். இதனால், இவர்கள் வீட்டில் தினமும் ஒரே பிரச்சினைதான்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ராஜமாணிக்கம் நன்றாக குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது, ஏன்டா.. இப்படி குடித்துவிட்டு வந்து அந்தப் பொண்ணை இப்படி அடிக்குற... என்று சந்திரன் மகனை கண்டித்துள்ளார்.
உடனே, ராஜமாணிக்கம், தந்தை என்றும் பாராமல் சந்திரனை தாக்கியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சந்திரன் அருகில் இருந்த கல்லையை எடுத்து ராஜமாணிக்கத்தின் தலையில் ஓங்கி அடித்தார்.
தலையில் ரத்தம் சொட்ட, ராஜமாணிக்கம் மயங்கிய நிலையில் கீழே சரிந்து விழுந்தார். இதைப் பார்த்த சந்திரன் பயத்தில் தப்பி ஓடிவிட்டார்.
இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து ராஜமாணிக்கத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மேலவளவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சந்திரனை தேடி வருகின்றனர்.
மதுபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.