மழைக்காக ஒதுங்கியவர் மீது புளியமரம் விழுந்து பலி
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கனமழையால் மாட்டு கொட்டகை மீது மரம் விழுந்ததில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்த எர்ரம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (54). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால், பழனியாண்டி, தனது வீட்டின் கொட்டகையில் மாடுகளை கட்டிவிட்டு, மழைக்காக அங்கேயே ஒதுங்கி நின்றிருந்தார்.
அந்த சமயத்தில் திடீரென வீசிய புயல் காற்றால் அருகில் இருந்த புளியமரம் திடீரென சாய்ந்து பழனியாண்டி நின்றுக் கொண்டிருந்த மாட்டுக் கொட்டகை மீது விழுந்தது. இதனால் அந்த கொட்டகையில் நின்றுக் கொண்டிருந்த பழனியாண்டி உள்பட கொட்டகையில் கட்டியிருந்த 2 மாடுகள் மற்றும் 2 ஆடுகளும் பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.