‘‘மகன் மாங்கல்யம் கொடுக்க மறுமணம் செய்த பேராசிரியை’’ : நெகிழ்ச்சி சம்பவம்
கல்லூரி பேராசிரியை ஒருவர் தன்னுடைய எட்டு வயது மகனின் கையால் திருமாங்கல்யத்தைப் பெற்று மறுமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஆதிஸ். தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த சுபாஷினி ராஜேந்திரன் என்பவரை நேற்று திருமங்கலத்திலுள்ள பெருமாள் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.
ஆங்கிலத் துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சுபாஷினி, முன்னரே திருமணமாகி கணவரைப் சட்டப்படி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒன்பது வயதில் தர்ஷன் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் ஓவியர் ஆதிசும் சுபாஷினி ராஜேந்திரனும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமங்கலத்திலுள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்திற்கு திருமாங்கல்யத்தை சுபாஷினியின் மகன் தர்ஷன் எடுத்துக் கொடுக்க, மணமகன் ஆதிஸ், மணமகள் சுபாஷினியின் கழுத்தில் கட்டினார். மேலும் நண்பர்களையே தங்களது உறவினர்களாகக் கொண்டு மாலை மற்றும் மெட்டி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர்.
பிறகு பெரியார் படத்தின் முன்பாக மாலை மாற்றிக் கொண்டனர். தனது மகனின் கையால் திருமாங்கல்யத்தைப் பெற்று, தான் ஏற்றுக் கொண்ட மணமகன் மூலமாக அதனைக் கட்டிக் கொண்ட பேராசிரியை சுபாஷினியையும், மணமகன் ஆதிஸையும் நண்பர்கள் பாராட்டினர்.
இத்திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த திருமண நிகழ்வு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.