தன்னுயிரை துச்சமென நினைத்து கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக உணவளிக்கும் தொண்டு நிறுவனம்! மதுரை என்றாலே பாசம்தான்!
மதுரையில் தன்னுயிரை துச்சமென நினைத்து கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளையும் இலவசமாக உணவளித்து வரும் தனியார் தொண்டு நிறுவனத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மதுரையில் டுகாதி என்ற நிறுவனர் தலைமையில் மதுரை வாலண்டியர்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள 4 பேரும் மக்களுக்காக அயராது உழைத்து சாலையோரம் வசிப்பவர்கள், ஏழை எளியோர் என தினசரி உணவளித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவிய சூழலில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால், மக்களின் வேதனையை அறிந்த இந்த தொண்டு நிறுவனம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சாலையோரம் உணவின்றி தவிப்பவர்கள், காவல்துறையினர் என ஏராளமானோருக்கு இலவசமாக வீடு தேடி சென்று 3 வேளையும் உணவளித்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரான மகாலட்சுமி (23) என்ற இளம்பெண், தான் லேப்டாப் வாங்க வைத்திருக்கு 85 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை இந்த நிறுவனத்திற்கு அளித்து, கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒராண்டு காலமாக உணவளித்து வருகிறார்.
இதனை அறிந்த பல நல்லுள்ளங்கள் இவர்களுடன் சேர்ந்து மக்களுக்கு இந்த உதவியை செய்து வருகின்றனர். இவர்களது இந்த சேவையை அறிந்த சிலர் நேரடியாக இவர்களது நிறுவனத்தின் அலுவலகத்திற்கே சென்று உணவு வாங்கி செல்கின்றனர்.
மேலும் இவர்கள் கண்பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், தினக்கூலி மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள சுமார் 300 குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.
தனக்கே உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில், சொந்த செலவில் மக்களின் பசியை ஆற்றி வரும் இவர்களின் சேவையை மதுரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.