தென் மாவட்டங்களுக்கான 5வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வந்தடைந்தது..!
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான ஐந்தாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் 90.64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இன்று மதியம் 12.33 மணிக்கு மதுரை கூடல் நகர் வந்து சேர்ந்தது. இது தமிழகத்திற்கு 35 ஆவதாகவும், மதுரைக்கு 3வது ஆக்சிஜன் ரயிலாகும். ரயில் நிலையம் வந்தடைந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள், ஆக்சிஜன் தேவைப்பட்ட மருத்துவமனைக்கு விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 2188.96 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.