மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வேட்டி,சட்டையுடன் சாமி தரிசனம் செய்தார் இந்தியா பிரதமர் மோடி. மதுரை வந்த பிரதமர் மோடி இன்று இரவு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தாராபுரத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து இன்று சிறப்பு விமானத்தில் மதுரை வந்தார். இன்று இரவு 8:40 மணிக்கு மதுரை மீனாட்சி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார். இன்று இரவு மதுரை பசுமலை கேட் வே ஓட்டலில் தங்குவார் எனவும் நாளை ரிங் ரோடு அம்மா திடலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பிரதமர் மதுரை வருகையையொட்டி மீனாட்சி கோயிலை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.